''மகளிர் சுயஉதவிகுழுக்கள் தமிழகம் முழுவதும் பரவி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுபோல இளைஞர் சுயஉதவிகுழுக்களும் செயல்பட வேண்டும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நூறு இளைஞர் சுய உதவிகுழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா ராஜாஅண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி.நகர் இமேஜ் அரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நூறு இளைஞர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினா.
பின்னர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 1989ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் மகளிர் சுய உதவிகுழுக்களை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். பெண்கள் சுயமாக பாடுபட்டு சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களது வாழ்க்கையை வளப்படுத்தி கொள்வதற்காகவும் தொடங்கப்பட்டது. இது வரை 3 லட்சத்து 54 ஆயிரம் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 57 லட்சம் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் சிறுசேமிப்பு செய்து கடன் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.
இளைஞர்களின் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இளைஞர் சுயஉதவிகுழுக்கள் தொடங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தோம். அதை கடந்த ஆண்டு நிறைவேற்றினோம். கடந்த ஆட்சி காலத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் நசுக்கப்பட்டது. படித்து பட்டம்பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிதொகையும் இந்த அரசு வழங்கி வருகிறது.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வேலை வாய்ப்பற்ற நிலை இருந்தாலும் உதவித்தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். கடந்த ஆண்டு 14 ஆயிரத்து 280 மகளிர் சுயஉதவிகுழுக்கள் தொடங்கப்பட்டு 2 லட்சத்து 43 ஆயிரத்து 160 உறுப்பினர்கள் சேர்ந்து செயல்படுகிறார்கள். வங்கியில் சேமிப்பாக ரூ.13 கோடியே 48 லட்சம் இருந்தது. சென்னை மாநகராட்சியில் 100 சுயஉதவி குழுக்கள் தொடங்கி சுழல்நிதி ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது. 2 ஆயிரத்து 700 சுயஉதவி குழுக்களுக்கு 6 கோடியே 75 லட்சம் ரூபாய் இதுவரை நிதி வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவிகுழுக்கள் தமிழகம் முழுவதும் பரவி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுபோல இளைஞர் சுயஉதவிகுழுக்களும் செயல்பட வேண்டும். செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.