ஹெல்மெட் அணியா‌விடி‌ல் ஓட்டுநருக்கு அபராதம்-நாமக்கல் ஆ‌ட்‌சிய‌ர்

வியாழன், 29 நவம்பர் 2007 (11:03 IST)
நாமக்கல் பகுதியில் "ஹெல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆ‌ட்‌சிய‌ர் எச்சரிக்கை விடுத்தார்.

நாமக்கல் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் ஆ‌ட்‌சிய‌ர
அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஆ‌ட்‌சிய‌ர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் ஜான் நிக்கல்சன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் சுந்திரமூர்த்தி பேசியது, நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை ஆயிரத்து 525 வாகன விபத்துகள் நடந்துள்ளன. அதில் 365 வாகன விபத்துகளில் 394 பேர் இறந்துள்ளனர். ஆயிரத்து 160 விபத்துகளில் உயிர் இழப்பு இல்லை. ஆனால் ஆயிரத்து 672 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இரு ‌ச‌க்கர வாகன விபத்துகள் மூலம் 235 பேர் இறந்துள்ளனர். 860 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இரு ‌ச‌க்கர வாகன விபத்துகளில் 80 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதை தடுக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் "ஹெல்மெட்' அணிய வேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று கூ‌றினார்.

மாவட்டத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது மற்றும் உயிரழப்பை அறவே களைவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வாகன ஓட்டிகள் அனைவரும் "ஹெல்மெட்' அணிய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதையடுத்து நேற்று மாலை நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், அந்த வழியாக இருச‌க்கர வாகனத்தில் வந்தவர்களை ஆ‌ட்‌சிய‌ர் சுந்தரமூர்த்தி, காவல்துறை கண்காணிப்பாளர் ஜான் நிக்கல்சன் தலைமையிலான குழுவினர் பிடித்தனர். அவர்களிடம் இதுவரை மாவட்டத்தில் நடந்த விபத்துகள் மற்றும் அதில் உயிரிழந்தவர்கள் குறித்து அறிவுரை வழங்கி "ஹெல்மெட்' அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தினர். பிடிபட்ட அனைவ‌ரிடமும் விளக்க கடிதம் பெறப்பட்டது.

இன்று முதல் "ஹெல்மெட்' அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிப்பதுடன், நீதிமன்ற நடவடிக்கையும் இருக்கும் என தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்