செஞ்சிலுவை சங்கத்தின் சின்னத்தை மருத்துவர்கள் பயன்படுத்த கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வாணிஸ்ரீ ஞானேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செஞ்சிலுவை சங்கத்திற்கு என்று `ரெட்கிராஸ்' சின்னம் உள்ளது. இந்த சின்னம் அதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட சின்னமாகும். இந்த சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று, ஏற்கனவே தமிழக அரசு 8.7.2002 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் இந்த சின்னத்தை மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து கடைகள் போன்றவற்றில் பயன்படுத்துகிறார்கள். எனவே, இவர்கள் இந்த `ரெட்கிராஸ்' சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் விசாரித்தனர். இதுபற்றி பதில் தருமாறு தமிழக அரசு, தமிழக மருத்துவ பேரவை, மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஆகியோருக்கு தாக்கீது அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.