கும்பகோணம் நகர இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராம் நகர் குரு மூர்த்தி தாக்கல் செய்து உள்ள மனுவில், நடிகர் பார்த்திபன் நடிக்கும் 'வல்லமை தாராயோ' என்ற புதிய படத்துக்கு பட பூஜை சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர் சிவசங்கரி, காவல்துறை அதிகாரி திலகவதி, நடிகை குஷ்பு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பட பூஜை நடந்த போது விழா மேடையில் முப்பெரும் தேவியரின் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை அருகே உள்ள இருக்கையில் நடிகை குஷ்பு அமர்ந்து இருந்தார். அப்போது அவர் கால்மேல் கால் போட்டுக்கொண்டு செருப்பு காலுடன் சாமி சிலையை நோக்கி ஆட்டியபடி இருந்தார். இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், இந்துக்களை புண்படுத்தும் விதத்திலும் நடிகை குஷ்பு நடந்து கொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாபுலால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதி தள்ளி வைத்தார்.
பெண்களின் கற்பு பற்றி கருத்து கூறியதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்புவுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். தற்போது அவர் மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.