இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு கடந்த 18 மாத காலமாக சேதமடைந்த கரூர் அமராவதி ஆற்றுப் பாலத்தைச் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகிறது.
19.12.2005 அன்று மேற்படி ஆற்றுப்பாலத்தில், தனியார் மூலம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த சுங்க வரியை ரத்து செய்து சேதமடைந்த கரூர் அமராவதி ஆற்றுப் பாலத்தை சீரமைப் பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள எனது தலைமையிலான அரசு ஆணை பிறப்பித்தது.
கரூர் அமராவதி ஆற்றுப் பாலம் சேதமடைந்து பொது மக்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய சூழ் நிலையில், பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க. கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் வரும் 29ஆம் தேதி (நாளை) கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.