தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று முன் பிணை வழங்கியது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மாநகராட்சி உறுப்பினர் சைதை வில்லியம்ஸ், மோகன், ரத்தினசாமி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விஷ்ணுபிரசாத்தான் காரணம் என்று மயூரா ஜெயக்குமார் குற்றம்சாற்றி இருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விஷ்ணுபிரசாத் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்களே என்ற காரணத்தால் முன் பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், விஷ்ணு பிரசாத்தை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தார்.
அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி, விஷ்ணுபிரசாத்துக்கு முன் பிணை வழங்கினார். 10 ஆயிரம் ரூபாய்க்கு ஜாமீனும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் செலுத்தி எழும்பூர் நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். வழக்கு விசாரணைக்கு விஷ்ணுபிரசாத் ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.