தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செய‌ல்ப‌ட்டா‌ல் நடவடிக்கை: காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia

செவ்வாய், 27 நவம்பர் 2007 (09:34 IST)
''தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம், போராட்டங்கள் செ‌ய்பவ‌ர்க‌ள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று காவ‌ல்துறை தலைமை இய‌‌க்குன‌ர் (டி.ஜி.பி.) ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் ராஜேந்திரன் நே‌ற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உள்ளிருப்பு கூட்டங்கள், பட்டிமன்றங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துபவர்கள், ஆர்ப்பாட்டங்கள், உருவ பொம்மைகள் எரித்தல், சாலை மறியல் செய்தல் போன்ற போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகள், தனி நபர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (1967) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தல், சுவர் விளம்பரங்கள் செய்தல், கண்காட்சி நடத்துதல் ம‌ற்று‌ம் எவ்வித ஆதரவு செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது. மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் அச்சிடும் அச்சக உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்களில் கட்சித் தலைவர்கள், முக்கிய நபர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ராஜே‌ந்‌திர‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்