''வழக்குகளை விரைந்து முடிப்பதில் சென்னை உயர் நீதிமன்றம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது'' என்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளான இன்றைய தினம் "சட்ட நாளாக” கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்ட நாள் விழாவில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பார் அசோசியேஷன், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் என ஏராளமான அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி மிஸ்ரா, சட்ட நாள் உறுதி மொழியை வாசித்தார். அனைவரும் அதனை உடன்கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சட்ட நாள் உரையாற்றிய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசுகையில், சென்னை உயர் நீதிமன்றத்தை தவிர மற்ற உயர் நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என மத்திய- மாநில அரசுகளை கேட்டுள்ளோம்.
விரைவில் அந்த இடங்கள் உயரும் என நம்புகிறோம். அப்படி உயரும் பட்சத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதி இடங்கள் 49ல் இருந்து 69ஆக உயரும். வழக்குகளை விரைந்து முடிப்பதில் இந்தியாவிலேயே சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது என்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தெரிவித்தார்.