''தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாத அரசியல் தலைவர்கள், எப்படி மக்களை பாதுகாக்க முடியும். எனவே தான் எங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை என்று நாங்கள் கூறுகிறோம்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அதன் மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளபடி ஏழை, எளியோருக்கு அரசு புறம்போக்கு நிலங்களை வழங்குவதற்கும், இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்குவதற்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். இதனை தகுந்த ஆதாரங்களுடன் என்னால் நிரூபிக்க முடியும். இதற்குரிய பட்டியலை கூட என்னால் தமிழக அரசிடம் வழங்க முடியும். எனவே இந்த பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில், சாலை மறியில் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது. விவசாயிகளின் இந்த மறியல் போராட்டத்தில், எங்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வார்கள். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் மையங்களை தமிழக அரசு திறக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பு காலத்தை உயர்த்துவதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேச்சு வார்த்தை நடத்தி, இந்த பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண வேண்டும். அரசியல் கட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சமூக விரோதிகளால் ஆபத்து என்பது எல்லா தரப்பு மக்களுக்கும் உள்ள பிரச்சனை. இந்த நிலையில், சிலருக்கு மட்டும் பாதுகாப்பு என்பது இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது. ஒட்டுமொத்தமாக சமூக விரோதிகளை ஒடுக்குவதே இதற்கு சரியான தீர்வாக அமையும். தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாத அரசியல் தலைவர்கள், எப்படி மக்களை பாதுகாக்க முடியும். எனவே தான் எங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை என்று நாங்கள் கூறுகிறோம்.
மத்திய அமைச்சர் இளங்கோவன் உருவ பொம்மையை கட்டித் தொங்க விட்டு அதில், "இது மாதிரிக்குதான். தொடர்ந்து இளங்கோவன் விமர்சித்தால் அவருக்கு உண்மையிலேயே இந்த நிலை தான் ஏற்படும்” என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இது கலவரத்தை தூண்டும் செயல்; அநாகரீகமானது. இதனை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.