மருத்துவ மாணவர் போராட்டத்தை அரசியலாக்காதீர்-அன்புமணி

ஞாயிறு, 25 நவம்பர் 2007 (16:17 IST)
மருத்துவம் பயிலும் மாணவர்கள் தங்கள் 5 ஆண்டு கால படிப்பை அடுத்து 1 ஆண்டு கிராமப்புறத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்ற முடிவை எதிர்த்து மருத்துவம் பயிலும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கட்டாய கிராமப்புற சேவையை எதிர்த்து போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பும் அரசியல் கட்சிகள், மறுபுறத்தில் கிராமத்தில் மருத்துவ வசதி கோரி போராட்டம் நடத்துவர். இது அரசியல் கட்சிகளின் இரட்டை நிலையையே உணர்த்தும்.

கல்வி ஆண்டை உயர்த்தும் மத்திய அரசின் முடிவிற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 3 வாரங்களை எட்டியுள்ளது. மருத்துவ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தும், போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் தொடர் உண்ணா விரதப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். எனினும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். எனினும் மற்ற போராட்டங்களை கைவிடப்போவதில்லை என்றும் அறிவித்தனர்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.

தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியான அஇஅதிமுக, இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை மருத்துவ மாணவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தும், இந்த பிரச்சினையை மத்திய அரசு வரை கொண்டு செல்வதாகவும் அறிவித்திருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்