தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மூலமாக 20 இடங்களில் அரசு புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், கல்லூரி விரிவுரையாளர்களாக சுமார் 37 ஆயிரம் பேர் மனுக்கள் அளித்திருந்தனர். அவர்களில் 16 ஆயிரம் பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 1020 பேர் விரிவு ரையாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான பணி நியமன ஆணையை அடுத்த மாதம் 1ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி வழங்கி இந்த நியமனங் களைத் தொடங்கி வைப்பார். இதில் நீதிமன்ற உத்தரவுப்படி 40 பணியிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள 975 விரிவுரையாளர்கள் பணியில் சேருவார்கள்.
பொறியியல் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் புதிதாக 20 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்திய ஆய்வின்போது 33 பொறியியல் கல்லூரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அகில இந்திய தொழில் நுட்ப கழகத்துக்கு தமிழக அரசு சிபாரிசு செய்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான சட்டத்தை இயற்றுவதற்கான ஆரம்ப கட்டபணிகள் நடந்துள்ளன. வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு கள் எடுக்கப்படும்.
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தமிழக அரசுக்கு தெரியாமல் பெங்களூரில் உள்ள தேசிய நிறுவனத்திடம் அனுமதி பெற்று வருகிறார்கள். புதிதாக ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்குவது பற்றிய விவரங்கள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.