ஈரோடு மாநகராட்சி அந்தஸ்து பெற்றதும் ஈரோடு நகருக்கு எத்தனை காவல்நிலையங்கள், அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேவை என்பதை பட்டியலிடும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு நகராட்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. ஆகவே ஏற்கனவே இருக்கும் காவல்நிலையங்களுடன் திண்டல் உட்பட கூடுதலாக மூன்று காவல்நிலையங்கள், ஒரு மகளிர் காவல்நிலையமும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி இரண்டு அவசரச் சட்டங்களை நவ., 17ம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. இந்த உத்தரவு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ஈரோடு மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ளதையடுத்து நகராட்சிகளின் கட்டமைப்பு அடியோடு மாறவுள்ளது. நிர்வாகம், காவல்துறை, சாலை, மின்சாரம், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் சீர்திருத்தப்பட உள்ளன.
அதன்படி நகராட்சி அதிகாரிகள் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை இணைத்து, மண்டலங்களை பிரிக்கும் பணி ஒரு புறம் வேகமாக நடக்கிறது. மறுபுறம் "மாநகராட்சி அந்தஸ்துக்கு தேவையான காவல்நிலையங்கள், அதிகாரிகள், காவலர்கள் பட்டியலிடும் பணியில் காவல்துறை அதிகாரிகள் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளனர்.