ஈரோ‌ட்டி‌ல் 15,37,000 வாக்காளர்கள்-மாவட்ட ஆட்சியர்

வெள்ளி, 23 நவம்பர் 2007 (16:21 IST)
ஈரோடு மாவட்டத்தில் புதிய வாக்காளர் விரைவு பட்டியலில், 15 லட்சத்து 37ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தா‌ர்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதியில், திருத்தத்துக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15 லட்சத்து 37 ஆயிரத்து 72 வாக்காளரின் பெயர்கள், புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்கள் ஏழு லட்சத்து 74 ஆயிரத்து 815. பெண் வாக்காளர்கள் ஏழு லட்சத்து 62 ஆயிரத்து 257 பேர் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் அலுவலகம், அனைத்து ஓட்டுச்சாவடி அமைவிடங்கள், கோட்டாச்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் டிசம்பர் 8ம் தேதி வரை பொதுமக்கள் பார்க்கலாம்.வரும் ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயரை சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ, நீக்கம் செய்யவோ விரும்புவோர், மேற்கண்ட இடங்களில் இலவசமாக பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விபரம் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

டிசம்பர் 8ம் தேதிக்குள் விண்ணப்பம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரும் 24, 25 மற்றும் டிசம்பர் 2ம் தேதியன்று அரசு விடுமுறை நாட்களாக இருப்பதால், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்நாட்களில் விண்ணப்பம் கொடுக்க வருவோர், தங்கள் புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டி விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் தங்கள் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்.

தமிழ்நாடு தேர்தல் இணையதளத்தில் சம்பந்தப்பட்ட படிவங்களை தேர்வு செய்து, இணையதள‌ம் மூலமும் விண்ணப்பம் கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்