பொங்கல் முதல் திருவாரூர் உள்ளிட்ட 3 காவிரி டெல்டா மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பினை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவரும், மேலாண் இயக்குருமான பிரிஜேஷ்வர் சிங் கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் தமிழகத்தில்தான் 1 கோடி வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது. இதில், 70 லட்சம் வீடுகளில் கேபிள் இணைப்பு உள்ளது. சென்னையில் மட்டும் 8 லட்சம் இணைப்புகள் உள்ளன. இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் தொலைக்காட்சி வைத்துள்ளவர்களில் 70 விழுக்காடு பேர் கேபிள் இணைப்பு பெற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெறும் 40 விழுக்காடாக இது இருந்தது. இதன் காரணமாகவே, தமிழகத்தை அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் குறி வைக்கிறார்கள்.
இவர்களில், பெரும்பாலானவர்கள் மக்களுக்கு தரமான சேவையை அளிப்பதில்லை. அதனால்தான் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான சேவை வழங்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்து களம் இறங்கியுள்ளது. தற்போது, ஆரம்பக்கட்டப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. மத்திய அரசிடமிருந்து எம்.எஸ்.ஓ. இணைப்பு பெறுவதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. முதல்நடவடிக்கையாக, சோதனை ஒளிபரப்பினை மக்கள்நெருக்கம் மிகுந்த காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
நாங்கள் வீடுகளுக்கு நேரடியாக கேபிள் இணைப்பு தரப்போவதில்லை. தமிழகத்தில் 6 முதல் 10 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து அங்கிருந்து தனியார் கேபிள் ஆபரேட்டர்கள் வழியாக ஒளிபரப்பு அளிக்கவுள்ளோம். ஆனால், எங்கள் ஒளிபரப்பு துல்லியமாக டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையில் இருக்கும். அதனை அப்படியே மக்களுக்கு கொண்டு சேர்ப்பது கேபிள் ஆபரேட்டர்கள் பொறுப்பு. இருப்பினும் நாங்கள் அவர்கள் தரமான சேவையை அளிக்கிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணிப்போம்.
பொங்கல் முதல் சோதனை ஒளிபரப்பு தொடங்க இருக்கிறோம். அனேகமாக திருவாரூர், பக்கத்து மாவட்டங்களில் ஒளிபரப்பு தொடங்கப்படும். தமிழகத்தில் பல நிறுவனங்கள் மாத வாடகை ரூ.100 அளவுக்கு வசூலித்து வருகிறார்கள். நாங்கள் கட்டாயம் அவர்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் அவர்களை விட குறைந்த கட்டணத்தையே வசூலிப்போம்.
எங்களது ஒளிபரப்பில் தற்போது இந்தியாவில் தெரியும் அனைத்து சேனல்களையும் தர உரிமை உள்ளது. எந்தவொரு டி.வி. நிறுவனமும் எங்களுக்கு தங்கள் சானல் ஒளிபரப்பை தரமாட்டோம் என மறுக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் கேபிள் இணைப்பு பெற்றுள்ள 60 விழுக்காடு பேர் தமிழ் சேனல்கள் உள்ளிட்ட 20 சேனல்கள் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
சென்னை போன்ற நகர்களில் உள்ள சிலர் மட்டுமே பி.பி.சி; சி.என்.என். போன்ற சேனல்களை பார்க்க விரும்புகிறார்கள், எனினும் அனைத்துத் தரப்பினரும் விரும்பும் வகையில் எல்லா சேனல்களையும் ஒளிபரப்புவோம்.