''சேதுசமுத்திர திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்'' என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது. அரசியல் தலைவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவதுடன் பத்திரிகை அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய முதலமைச்சரே தீவிரவாதிக்கு இரங்கல் கவிதை எழுதி புகழ்பாடும் நிலை உள்ளது. தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், பா.ம.க. கூட தமிழகத்தில் அமைதியான சூழ்நிலை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளன. எனவே மத்திய அரசு, அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி தி.மு.க. அரசை கலைக்க செய்ய வேண்டும். மத்திய அரசு அதை நிறைவேற்ற தவறினால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசை கலைக்க கோரி வழக்கு தொடருவேன்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஒழித்துவிட்டால் இலங்கையில் வாழும் தமிழர்களை நசுக்கி விடலாம் என்று இலங்கை அரசு கருதுகிறது. ஆனால் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க அமெரிக்கா, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளுடன் எனக்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி தமிழர்களை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்வேன்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்து தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அணையின் நீர்மட்டத்தை உயர்த்திட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சேதுசமுத்திர திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்பதாலும், இத்திட்டம் பொருளாதார ரீதியில் நன்மை பயக்காது என்பதாலும் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனினும் தேர்தல் வரையில் தனது முடிவை அரசு வெளியிடாது என்றும் அந்த அமைச்சர் கூறினார். இத்திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து ராமரிடம் தோல்வி அடைந்து விட்டதாக கருணாநிதி ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.