இந்தியாவிலேயே முதன் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.450 கோடி செலவில் மருத்துவ கிராமம் அமைப்பதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று ஒப்பந்தம் ஆனது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இருதய அறுவை சிகிச்சை துறையில் முன்னோடியாக திகழ்பவர் மருத்துவர் கே.எம்.செரியன், இவர் நாட்டிலேயே முதன் முதலில் இருதய ரத்தக் குழாய் மாற்று அறுவை சிகிச்சை, இருதய நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, பச்சிளம் குழந்தை இருதய மாற்று அறுவை சிகிச்சை முதலியவற்றை செய்தவர் ஆவார். இவர் மருத்துவர் கே.எம்.செரியன் ஆர்ட் பவுன்டேஷன் அமைத்து அதன் மூலமாக இருதய துறையில் சிறப்பான மருத்துவ வசதிகளுடன் கூடிய ஒரு மருத்துவமனையை பிரான்டியர் லைப்லைன் என்ற நிறுவனத்தின் பெயரில் நடத்தி வருகிறார். மருத்துவர் கே.எம்.செரியன் டிட்கோவுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் "பிரான்டியர் மெடிவில்லி'' என்ற பெயரில் மருத்து கிராம திட்டத்தை உருவாக்க உள்ளார்.
பிரான்டியர் லைப்லைன், டிட்கோவால் உருவாக்கப்படவுள்ள மருத்துவ கிராமம் 5 ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட இருக்கின்றன. இதில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பான மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனை உருவாக்கப்பட உள்ளது. இம்மருத்துவமனையில் புனர்வாழ்வு, பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யோகா போன்ற மருத்துவ வசதிகளும் செயல்பட இருக்கின்றன.
மேலும் மருத்துவ பல்கலைக்கழகம், மருத்துவ உபகரணங்கள், உற்பத்தி செய்ய நுண்கிருமிகளற்ற பகுதிகள், ஆராய்ச்சி உயிரினங்கள் கூடம், ஆசிய பசிபிக் உயிர் குழுமத்துடன் இணைந்து உலக தாவரவியல் பூங்காவும் அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மூலமாக சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வட சென்னை பகுதி அனைத்து விதத்திலும் வளர்ச்சி அடைய ஊக்கமளிப்பதாக அமையும். ஏனெனில் மேற்கு, சென்னை புறநகர் பகுதிகளை விட வடசென்னை புறநகர் பகுதி குறைந்த வளர்ச்சி அடைந்துள்ளது.
இத் திட்ட மதிப்பீடு சுமார் ரூ.450 கோடி ஆகும். இதற்காக 125 ஏக்கர் நிலத்தை இந்நிறுவனம் வாங்கியுள்ளது. கி.பி.2010ல் உலகில் உள்ள மொத்த 18 உயர் மருத்துவமனைகளில் ஒன்றாகவும், இந்தியாவிலேயே முதன் முதலில் அமையவிருக்கின்ற மருத்துவ அறிவியல் பூங்கா, உயிர் மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவ அறிவியல் பூங்காவை சுற்றியுள்ள கிராம மக்களுக்காக மருத்துவ முகாம்களை நடத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த மருத்துவ சேவை தமிழகத்தின் பின் தங்கிய கிராமங்களுக்கும் சென்றடையும். இந்த திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தின் அறிவியல், தொழில் நுட்ப அமைச்சகம் நிதி ஒதுக்கியுள்ளது. இதனை அறிவியல், தொழில் நுட்ப துறை, தொழில் நுட்ப வளர்ச்சி ஆணையம், உடல் நல ஆராய்ச்சி துறை மூலமாக ஆராய்ச்சி, மேம்பாட்டிற்காக வழங்கப்படவுள்ளது.
21.11.2007 அன்று கூட்டுத்துறை ஒப்பந்தத்தில் தமிழக முதலமைச்சர் கலைஞர் முன்னிலையில் மருத்துவர் கே.எம். செரியன், தலைவர், முதன்மைச் செயல் அலுவலர் பிரான்டியர் லைப்லைன், ராமசுந்தரம், தலைவர், இயக்குனர், டிட்கோ ஆகியோர் கையெழுத்திட்டனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.