தர்மபுரி அரசு தொட்டிலில் சிசுக்களின் எண்ணிக்கை 1001 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு பெண் சிசுக்கள் தொட்டிலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெண் சிசுக்களின் மரணம் விகிதம் அதிகமாக இருந்த மாவட்டம் தர்மபுரி, தேனி, சேலம், மதுரை, திண்டுக்கல் ஆகியவை ஆகும். இங்கு கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக்களை கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பெண் சிசு கொலையை முற்றிலும் ஒழிக்க கடந்த 2002ஆம் ஆண்டு தர்மபுரியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொட்டில் மையம் அரசால் உருவாக்கப்பட்டது. இந்த மையம் மாவட்ட சமூகநலத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தர்மபுரி தொட்டில் மையத்தில் நேற்று காலை வரை குழந்தைகளின் எண்ணிக்கை 999 ஆக இருந்தது. இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்து சில நாட்களே ஆன பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் சிசு ஒன்று குழந்தை தொட்டில் மையத்தில் ஒப்படைக் கப்பட்டது.
இதேபோல் தர்மபுரி குப்பூர் பகுதியை சேர்ந்த சித்தன் - தீபா தம்பதியினர் வறுமையின் காரணமாக 3-வதாக பிறந்த பெண் சிசுவை வளர்க்க முடியாமல் தொட்டில் மையத்தில் ஒப்படைத்தனர். இதனுடன் சேர்த்து தர்மபுரி அரசு தொட்டிலில் சிசுக்களின் எண்ணிக்கை 1001 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமுள்ள 1001 குழந்தைகளில் 40 ஆண் சிசுக்கள். மீதமுள்ளவை பெண் சிசுக்கள் ஆகும். இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2002-ம் ஆண்டு 158 சிசுக்களும், 2003ல் 207 சிசுக்களும், 2004ல் 156 சிசுக்களும், 2005ல் 178 சிசுக்களும், 2006-ல் 161 சிசுக்களும், 2007-ல் இதுவரை 141 சிசுக்களை சேர்த்து 1001 சிசுக்கள் ஆகியுள்ளது.