மரு‌த்துவ மாணவ‌ர்க‌ள் ‌விடிய ‌விடிய போரா‌ட்ட‌ம்!

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (10:14 IST)
மரு‌த்துவ படிப்பினை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதை கண்டித்து சென்னையில் மருத்துவ மாணவர்கள் ‌விடிய ‌விடிய உ‌ண்ணா‌விரத போ‌ராட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் சாகும் வரை தொடர போவதாகவும் முடிவுசெய்துள்ளனர்.

மரு‌த்துவ படிப்பினை ஐ‌ந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதை கண்டித்து தமிழகம் முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி மரு‌த்துவ‌ர்க‌ள் கடந்த 15ஆ‌ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இவர்கள் சென்னை மருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை துவ‌ங்‌கின‌ர். இத‌ி‌ல் 150 மாண‌விக‌ள் உ‌ள்பட 250 பே‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு பிரிவாகவும், இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மற்றொரு பிரிவாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் 24 மணி நேரமும் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மரு‌த்துவ‌ர்க‌ள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சதீஷ்குமார் கூறுகை‌யி‌ல், மருத்துவ படிப்பு காலத்தை எக்காரணம் கொண்டும் ஐ‌ந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தக் கூடாது. கிராமப்புற சேவை என்று கூறிவிட்டு 8 மாதம் மாணவர்களை நகர்புறங்களில் பணியாற்ற சொல்கிறார்கள். இந்த திட்டம் கிராம மக்களை ஏமாற்றுவதாகும்.

இதனை உடனே மத்திய அமை‌ச்ச‌ர் அன்புமணி கைவிடவேண்டும். இதில் முதலமைச்சர் கருணாநிதி தலையிட்டு சுமூக தீர்வு காணவேண்டும். இல்லை என்றால் நாளை (இன்று) மாலை முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருக்க முடிவு செய்துள்ளோம் எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

உண்ணாவிரத போராட்டத்தில் சென்னை மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவர்களும், பயிற்சி மரு‌த்தவ‌ர்களும் கலந்து கொண்டனர். இதேபோல் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி விடுதி வளாகத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திலும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்