கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் நடைபெற்றது போல் கலவரம் நடைபெறும் என்பதாலேயே ஆதரவை வாபஸ் பெற்றதாக குமாரசாமி கூறியிருப்பதை பார்த்தால் அவரது மனதில் தான் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் கூறினார்.
சிதம்பரத்தில் நடைபெறும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இதனை குடிப்பவர்கள் நலம் பெறுகிறார்களோ இல்லையோ, கள் இறக்கும் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனர்வகளுக்கு போதிய அளவு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனை கண்டித்து நவம்பர் 30ஆம் தேதி என் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் நடைபெற்றது போல் கலவரம் நடைபெறும் என்பதாலேயே ஆதரவை வாபஸ் பெற்றதாக குமாரசாமி கூறியிருப்பதை பார்த்தால் அவரது மனதில் தான் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது நடைபெறும் திமுக ஆட்சி, அதன் கடைசி ஆட்சியாகும். இதற்கு பிறகு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வராது. அது தெரிந்து தான் ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் அதிக முறைகேடுகளிலும், சட்ட மீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு மத்திய புலனாய்வு கழக விசாரணை (சிபிஐ) வேண்டுமென்று அறிவித்துள்ள அவர், சென்னையில் பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்பட்டதற்கு நாங்கள் ம.பு.க. விசாரணை கோரியும் இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தனக்கு என்றால் ஒரு மாதிரியான அணுகுமுறையும், மற்றவர்களுக்கு என்றால் வேறு மாதிரி அணுகுமுறையும் முதல்வர் கருணாநிதி மேற்கொண்டு வருகிறார் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் குற்றம் சாற்றினார்.