''ராஜீவ் காந்தி சாலையை மக்கள் எளிதில் கடப்பதற்கு வசதியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படும்'' என்று நெடுஞ்சாலைதுறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் கூறினார்.
அடையாரில் தற்போது நடைபெற்று வரும் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள 6 வழிச்சாலை பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.
ராஜீவ்காந்தி சாலை என்று அண்மையில் பெயரிடப்பட்ட தகவல் தொழில் நுட்ப 6 வழிச்சாலை பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன், இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் கருணாநிதி அண்மையில் ராஜீவ்காந்தி சாலை என்று பெயர் சூட்டிய மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி விரையிலான தகவல் தொழில்நுட்ப 6 வழி சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
ரூ.215 கோடி திட்டத்திலான இப்பணிக்கு கூடுதலாக ரூ.75 கோடி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ் முதல் தரமணி இணைப்புச்சாலை வரையிலான பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள இரண்டு கட்டப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்.
இது தவிர சோழிங்கநல்லூர் சந்திப்பு முதல் கிழக்கு கடற்கரை சாலை வரையிலான சுமார் 2.2 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி மார்ச் மாதத்தில் முடிவடையும்.
ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்திற்கு நெரிசல் உள்ள இடங்களில் மேம்பாலம் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையை மக்கள் எளிதில் கடப்பதற்கு வசதியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படும். இந்த பணி முடிவடைந்ததும் சிறுசேரி முதல் பூஞ்சேரி வரையிலான சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிப்பாதை அமைக்கம் பணி அடுத்த கட்டமாக தொடங்கும்.
தற்போது அமைத்துள்ள ராஜீவ்காந்தி சாலைகள் பணிகள் முடிவடைந்ததும் பெருங்குடி எல்காட் நிறுவனம் அருகே சுங்கவரி வசூலிக்கும் டோல்கேட் அமைக்கப்படும். இந்த பகுதியில் உள்ள உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கும் வகையில் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சாமிசாதன் கூறினார்.