65 வயது நிரம்பியவர்களுக்கு வருமான நிபந்தனை தளர்த்தப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம் என்ற பெய ரில் புதிய திட்டத்தை இந்திரா காந்தி பிறந்த நாளான இன்று முதலமைச்சர் கருணாநிதி துவங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த விழாவில் 25 முதியோருக்கு உதவித்தொகைகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்கி பேசுகையில், இன்று இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமிதம் அடைகிறேன்.
முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பாடுபட முடியாத, வலுஇல்லாத ஆதரவற்ற ஏழை எளியோர்கள் பயன் பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த திட்டம் 1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது மாதம் ரூ.20 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அப்போது இந்திரா ஓய்வூதிய திட்டம் என்ற பெயர் சூட்டப்படவில்லை.
1962ல் 20 ரூபாயாக வழங்கப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகை அதன்பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதும் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருந்த போதும் படிப்படியாக உயர்த்தப்பட்டு மாதம் 200 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்தது. தற்போது தமிழக அரசு அதை ரூ.400 ஆக உயர்த்தி வழங்கி வருகிறது. இதில் ரூ.200 இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 200 ரூபாயை தமி ழக அரசு வழங்கி வருகிறது. இது அடுத்து வரும் ஆண்டுகளில் விரிவு படுத்தப்படும்.
மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து ரூ.400 வழங்குவதை விட மத்திய அரசே ஓய்வூதியத் தொகையை ரூ.400 ஆக வழங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். அவ்வாறு வழங்கினால் ஏழை எளியோர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.