தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.
தி.மு.க. அரசு உருப்படியாக எந்த திட்டத்தையும் அறிவிக்கவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை. 2 ரூபாய்க்கு அரிசி என்று சொல்லி அவர்களது கட்சிக்காரர்கள் வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தி சம்பாதிக்க வழி செய்ததும், இலவச கலர் டி.வி. என்ற பெயரில் கட்சிக்காரர்கள் அரசு தரும் தொலைக்காட்சிகளை விற்று சம்பாதிக்க வழி வகுத்ததும்தான் இந்த அரசின் சாதனை.
இதே போல இலவச கியாஸ் அடுப்பு இன்னொரு மோசடி திட்டம். பாவம் ஏழைகள். மண்எண்ணெய் வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் இப் போது கியாஸ் சிலிண்டர் வாங்க ரூ.300க்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். எதையுமே உருப்படியாக செய்வதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. தெளிவு இல்லாத, குறிக்கோள் இல்லாத ஆட்சி ஒன்று இருக்குமானால் அது இந்த ஆட்சிதான்.
இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இதற்கு வேண்டுமானால் இந்த ஆட்சிக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுத்தே தீர வேண்டும். காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குகிறார்கள். அவர்களது கட்சி மாவட்ட செயலாளர் வெட்டிச் சாய்க்கப்படுகிறார். இதுதான் இந்த ஆட்சியின் சாதனைகள் என்று விஜயகாந்த் குற்றம்சாற்றினார்.