65 வயதுக்கு மேற்பட்ட ஏழை முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு சார்பில் 65 வயது நிறைவடைந்த ஆதரவற்ற முதியோருக்கு தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.400 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு ஆதரவற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
அது, தளர்த்தப்பட்டு, 65 வயதுக்கு மேற்பட்ட, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த அனைவரும் முதியோர் உதவித்தொகை பெற வகைசெய்யும் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை திட்டம் என்ற புதிய திட்டம் நாளை (19ஆம் தேதி) அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை கோட்டையில் காலை 11.15 மணி அளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், இத்திட்டத்தினை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குகிறார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.