அரியலூர் மாவட்ட தொடக்க விழா வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
2006ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றவுடன், அரியலூர் மாவட்டம் மீண்டும் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அரியலூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அரியலூர் மாவட்ட தொடக்கவிழா வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. புதிய அரியலூர் மாவட்டத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விழா அரியலூர் அரசு ஐ.டி.ஐ வளாகத்தில் நடைபெற உள்ளது.
விழா நடைபெற உள்ள இடத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனில் மேஷராம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கர், உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் விழாப் பணிகள் குறித்து ஆட்சித் தலைவர் அனில் மேஷராம் ஆலோசனை நடத்தினார்.