அமைதி பேரணி நடத்திய எங்களை அடக்குமுறை மூலம் கைது செய்து விட்டு சுப.தமிழ்ச்செல்வனுக்காக கவிதாஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் கருணாநிதி உலகத் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க சென்னையில் காவல்துறையினர் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன் உட்பட 262 பேர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகானந்தம், அனைவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, இன்று வைகோ, நெடுமாறன் உட்பட 262 பேரும் புழல் சிறையிலிருந்து விடுதலையானார்கள். சிறை வாயிலில் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் உணர்வுடன் மரணக்குழிக்கு சென்றுள்ள தமிழர்களுக்காக அனைத்து நாடுகளுடனும் பேச்சு நடத்தி வெற்றி கண்ட மாவீரன் தமிழ்ச்செல்வன், குண்டுவீச்சில் வீரமரணமடைந்தார்.
இதற்காக தமிழ் உணர்வு உள்ள பல்லாயிரக்கணக்கான தோழர்கள் இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமைதிப் பேரணி நடத்தினோம். உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த உள்ளுணர்வை புரிந்து கொள்ளாத முதலமைச்சர் கருணாநிதி அடக்குமுறை மூலம் என்னை போன்ற தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்.
அதேசமயம், தமிழ்ச்செல்வனுக்காக அவர் கவிதாஞ்சலியும் செலுத்தினார். இது உலகத் தமிழர்கள் அனைவரையும் ஏமாற்றும் செயலாகும். அரசு விடுவிக்கும் என்று எதிர்பார்க்காமல் நீதிமன்றம் மூலம் விடுதலையாகியிருக்கிறோம் என்று வைகோ கூறியுள்ளார்.