''புதுச்சேரி விவசாயிகள் விவசாய கடனை தள்ளுபடி செய்யும் வரை அதற்கான வட்டியை செலுத்த தேவையில்லை'' என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுளள் காமராஜர் பொறியியல் - தொழில் நுட்ப நிறுவனம் என்ற பொறியியல் கல்லூரியை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து பேசுகையில், காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம், துறைமுகம், விமான தளம், நாகூர்-காரைக்கால் இடையிலான அகல ரெயில் பாதை திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. இதனால் இந்த மாவட்டம் நல்ல வளர்ச்சியை அடையும்.
இந்த மாவட்டத்தில் ரூ.24 கோடி செலவில் அதி நவீன மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதனை கட்டி முடித்து நல்ல தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க கூடிய தனியாரிடம் வழங்கலாமா? என்றும் அரசு ஆலோசித்து வருகிறது.
இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர் விவசாய கடன் தள்ளுபடி செய்து அறிவித்தும் கூட்டுறவு வங்கிகள் கடனுக்கான வட்டியை வசூல் செய்வதாக குறிப்பிட்டார். இதற்கான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது கிடைத்தவுடன் கடன் தள்ளுபடி செய்யப்படும். அதுவரை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்து அறிவித்த தேதியிலிருந்து அதற்கு முன் உள்ள வட்டியை கட்ட தேவையில்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.