குரு பெயர்ச்சி : குருஸ்தலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி, 16 நவம்பர் 2007 (14:31 IST)
webdunia photo
WD
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றானதும், குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில் இன்று நடந்த குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை தரிசனம் செய்தனர்.
அதிகாலையில் ஆபத்சகாயேஸ்வரர், எல்லாரீகுழலம்மை, குருபகவான், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சுவாமி, அம்பாள், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சன்னதிகளில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்த குரு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக நள்ளிரவு முதலே பக்தர்கள் திரண்டனர்.
பக்தர்கள் சிரமமின்றி சென்று வர கும்பகோணம், மன்னார்குடி, தஞ்சை, திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் இளங்கோவன், உதவி ஆணையர் பழனியப்பன், அறங்காவலர் குழு தலைவர் அன்பரசன், நிர்வாக அதிகாரி பொன் நந்தகோபால், கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவிலில் 22ஆம் தேதி 2-வது லட்சார்ச்சனையும், பரிவாரங்களும் செய்யப்படுகிறது.
தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள திட்டை கிராமத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற வசிஷ்டேசுவரர் கோவில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். திட்டையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையே குருபகவான் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள் பாலித்து வரும் அமைப்பு வேறு எந்த கோவிலிலும் கிடையாது.
இக்கோவிலில் இன்று அதிகாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. விழாவையொட்டி குருபகவானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு ஹோமங்கள் தொடங்கி நாள் முழுவதும் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொட்டும் பனியிலும் பூஜையில் பங்கேற்றனர். இதற்காக பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமரத்தினம், நிர்வாக அலுவலர் கோவிந்தராஜீ ஆகியோர் செய்து இருந்தனர்.