''உற்பத்தி குறைவு காரணமாக, தென் மாவட்டங்களுக்கு குறைந்த மின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்'' என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது'' என்று தமிழக மின்ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னையில் தமிழக அரசு அமைத்த மாநில மின் ஒருங்கிணைப்பு அமைப்பு கூட்டம் நடந்தது. தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.கபிலன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மச்சேந்திரநாதன், ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்கள் பி.ஜெயராமன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைவர் எஸ்.ஜெயராமன், மத்திய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தற்போதைய மின்வினியோக நிலைமை பற்றி ஆராயப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் 7,800 மெகாவாட் கூடுதல் மின்உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பது விவாதிக்கப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மின் தேவையை, காற்றாலைகள் போன்ற மரபு சாரா எரிசக்தி ஆலைகள் மூலம் ஈடுசெய்வது பற்றியும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வடபகுதிக்கு கொண்டு வருவதிலும், மீண்டும் அப்பகுதியில் வினியோகப்பதிலும் சிக்கல் இருந்து வருகிறது. இதனால் கோடைகாலத்தில் அங்கு மின்வினியோகத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இவற்றை சரிப்படுத்தும்வரை, தென் மாவட்டங்களில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது என்று தமிழக மின் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.