''தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்படும்'' என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நரேஷ்குப்தா கூறுகையில், புகைப்படங்கள் பெறுவதில் சற்று பின்தங்கி இருக்கும் ராயபுரம் தொகுதியில் ஜனவரி 3ஆம் தேதி வரைவுப் பட்டியல் வெளியிடப்படும். பெயர் சேர்ப்பது அல்லது ஆட்சேபணை தொடர்பாக டிசம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகத்தில் உள்ள அனைத்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்படும். தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 96.49 விழுக்காடு முடிந்துள்ளது.
தமிழகத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி 90 விழுக்காடு முடிந்து விட்டது. இன்னும் 11 லட்சத்து 57 ஆயிரத்து 580 அட்டைகள் அச்சடிக்கப்பட உள்ளன. 7 லட்சத்து 78 ஆயிரம் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு, வழங்குவதற்கு தயாராக உள்ளன. தேர்தல் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடம் உருவாக்குவதற்காக எம்.ஓ.பி.வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் மாணவிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.