மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் போக்குவரத்தை முதலமைச்சர் கருணாநிதி வரும் 19ஆம் தேதி துவக்கி வைக்கிறார் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை கடற்கரை - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் போக்குவரத்தை துவங்க திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி மயிலாப்பூர் வரை இரு வழிப்பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மைலாப்பூரில் இருந்து திருவான்மியூர் வரையிலான ஒரு வழிப்பாதையில் குறைந்த அளவிலான ரெயில்களே தற்போது இயக்கப்படுகிறது.
பறக்கும் ரயில் சேவையை வேளச்சேரி வரை நீட்டிப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தன. மேலும், மயிலாப்பூர் - திருவான்மியூர் இடையே இருவழிப் பாதையாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வந்தது. திருவான்மியூர்- வேளச்சேரி இடையே சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி ஜூன் மாதத்தில் முடிக்கப்பட்டது. ஜூலை மாதம் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் 2 முறை இந்த ரெயில் பாதையை ஆய்வு செய்து, வேளச்சேரி வரை பறக்கும் ரெயிலை இயக்கலாம் என்று அறிவித்தனர்.
ஆனால் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி கொடுத்து 4 மாதங்களாகியும், திருவான்மியூர் - வேளச்சேரி இடையே ரெயில் போக்குவரத்து துவங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இந்த பாதையில் ரயில் சேவை துவக்கப்பட்டால் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 35 நிமிடத்திலே சென்று விடலாம்.
இந்த நிலையில் மயிலாப்பூர்- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் போக்குவரத்தை முதலமைச்சர் கருணாநிதி வரும் 19ஆம் தேதி துவக்கி வைப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , மயிலாப்பூர்- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் போக்குவரத்தை 19ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். துவக்க விழா வேளச்சேரி ரயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்குகிறார்.
ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ரயில்வே அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள் என்று தெற்கு ரெயில்வே செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.