சென்னை காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், பழவேற்காடு, எண்ணூர், பட்டினம்பாக்கம், மெரீனா ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டு, ராட்சத அலைகள் உண்டாகின. இதனால் பொது மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுமரங்கள், சிறு படகுகள் அலையில் இழுத்து செல்லப்பட்டன. பின்னர் அலைகள் அவற்றை கரை ஒதுக்கியது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
காசிமேட்டில் உள்ள அப்பர் குப்பம் பகுதியில் 10 குடிசைகள் கடல் அலையால் அடித்து செல்லப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பிரம்மாண்டமான அலைகள் எழுந்ததால் சுனாமி வருமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். வங்கக் கடலில் உண்டாகியுள்ள பெரும் புயலின் பாதிப்பதால் இந்த அலைகள் உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.