''எனது உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பொறுப்பேற்கவேண்டும்'' என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் கூறியுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரனை இன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இன்று புகார் மனு கொடுத்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்தியமூர்த்தி பவனில் கடந்த 11ஆம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எனது தந்தை கிருஷ்ணசாமி மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் பற்றியும், அதனை தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அப்போது, எதிர்பாராதவிதமாக நடைபெற்ற சம்பவத்திற்கு என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறி மேல் சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்காமல், மத்திய அமைச்சர் ஜி கே. வாசன் சத்திய மூர்த்தி பவனுக்குள் வந்து என்னைப்பார்த்து, ஆபாச வார்த்தைகளால் பேசியதுடன், "அவனை கொல்லுங்கடா' என்று உரத்த குரலில் கூறினார்.
அவரது தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் எங்கள் மீது கற்களை வீசினார்கள். காவல்துறையினர் என்னை அங்கிருந்து வெளியேற்றினர். ஒரு மத்திய அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டது சரியல்ல. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து விவரமாக தெரிவிக்க உள்ளேன்.
எங்களது உயிருக்கும், உடைமைக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், அவரது ஆதரவாளர்கள் தான் பொறுப்பு. இது குறித்து கட்சி மேலிடம் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விஷ்ணுபிரசாத் கூறினார்.