17 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

Webdunia

புதன், 14 நவம்பர் 2007 (17:58 IST)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 17 மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியர்கள் கண் பார்வை, இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இருதய பரிசோதனை 464 பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

அதில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 13 மாணவர்களில் 2 பேரு‌க்கு இருதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வசதி இல்லாத இவர்களுக்கு குழந்தைகள் தினமான இன்று இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டமைக்காக தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார்.

அதே போன்று சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் 23,969 மாநகராட்சி மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 295 மாணவர்களுக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. முதல் கட்டமாக 50 மாணவர்களுக்கு அமைச்சர் மு.க. ஸ்டாலின் மூக்குக் கண்ணாடிகள் வழங்கினார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 17 மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் 10 மருத்துவர்கள் சென்னை மாநகராட்சி மகப்பேறு மையங்களிலும், 7 மருத்துவர்கள் மாநகராட்சி மருந்தகங்களிலும் பணிபுரிவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்