''நடைமுறைச் சிக்கல்கள், எழக்கூடிய சட்டப் பிரச்சினைகளை ஆய்வு செய்து விரைவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க சமச்சீர் கொள்கை உருவாக்கப்பட்டு சமச்சீர் கல்வித் திட்டம் நடை முறைப்படுத் தப்படும்'' என்று கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வி என்பது தமிழகத்தில் பயிலும் அனைத்து பள்ளி மாணவ-மாணவியரும் ஒரே பாடத் திட்டத்தின் அடிப்படையில் தரமான கல்வியைப் பயிலக் கூடிய வகையில் அமையக் கூடிய கல்வி முறையாகும். தி.மு.க. அரசு அமைந்தவுடன் இது குறித்து ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வு பெற்ற துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது பரிந்துரையினை அரசுக்கு அளித்தது.
இக்குழுவின் அறிக்கை கடந்த சட்டப் பேரவைத் தொடரில் அவையிலே வைக்கப்பட்டு விட்டது. இந்த பரிந்துரைகளை ஆய்ந்து அவற்றை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்தும் அரசுக்குத் தெரிவிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
முத்துக்குமரன் குழுவின் அறிக்கையில், மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்ட முறை ஒரு பொதுவான கல்வி அமைப்பின் கீழ் இயங்க வேண்டும் என்றும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையான வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதால் இது குறித்தும் மாநிலத் திட்டக் குழுவிடம் விரிவாக விவாதிக்கவும் மாநிலத் திட்ட இயக்குநருக்கு அறிவுரை வழங்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகாறும் இருந்து வந்துள்ள கல்வி முறையில் அடிப்படையில் பெரும் மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளதாலும் அனைத்துக் கூறுகளையும் அரசு செவ்வனே ஆராய்ந்து தக்கதோர் சமச்சீர் கல்வி முறையினை வடிவமைக்க வேண்டியுள்ளதாலும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறதே தவிர அரசு சமச்சீர் கல்வி குறித்து தீவிர ஆர்வத்துடன் பணிகளை முடுக்கி விட்டுள்ளது என்பதே உண்மையாகும்.
நடைமுறைச் சிக்கல்கள், எழக்கூடிய சட்டப்பிரச்சினைகளை ஆய்வு செய்து விரைவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க சமச்சீர் கொள்கை உருவாக்கப்பட்டு இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.