கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ரூ.117 கோடி மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.12 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலைய விரிவாக்கம், குடிநீர் விஸ்தரிப்பு, கூடுதல் பள்ளி கட்டடம், கல்வெட்டுகளை திறந்து வைத்து பேசுகையில், தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அனைத்து திட்டங்களுமே மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கோவை மாவட்டம் திருப்பூர் நகராட்சியாக இருந்தது. இதை மாநகராட்சியாக ஆக்க வேண்டும் என சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. கலைஞர் உடனே திருப்பூரை மாநகராட்சியாக ஆக்க அறிவிக்க சொன்னார். உடனே சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பெரியார் தலைவர் பதவி வகித்த ஈரோடு நகராட்சியை மாநகராட்சி ஆக்க 90 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் கேட்டுக் கொண்டார். அவரது கனவை நனவாக்கும் வகையில் ஆய்வுப்பணி மேற் கொள்ளப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உத்தரவு வந்த உடன் திருப்பூர், ஈரோடு மாநகராட்சியாகும். இதற்கான விழா டிசம்பர் அல்லது ஜனவரியில் நடக்கும்.
இப்பொழுது 3-வது கட்டமாக 34 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் 4-வது கட்ட ஒப்பந்தமும் விடப்படும். தேர்தலின்போது தமிழக அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.