ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 650க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, இரவு 12.30 மணி அளவில் அந்த பகுதியில் வந்த இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கிருபைராஜ், அந்தோணிராஜ், ஆபாஸ்கர், ரூபன் ஆகியோர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கிருபைராஜ் என்ற மீனவரின் இடது தொடையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். மற்ற மீனவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் உடனடியாக ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த கிருபைராஜ் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அவரது தொடையில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டை வெளியே எடுத்தனர். காயமடைந்த மற்ற மூன்று மீனவர்களும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மீனவர் சங்க தலைவர் முருகானந்தம் கூறுகையில், ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. மத்திய - மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.