இரங்கல் ஊர்வலம் நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனை ஏதுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழ மண்ணில் வீரச்சாவடைந்த சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தமிழ் போராளிகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த இயலாது என்னும் நிலையில் தமிழகத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதும், இரங்கல் அணி வகுப்பு, கூட்டங்களை நடத்துவதும் மனித நேயத்தின் அடிப்படையிலான செயல்களே ஆகும்.
ஆனால் கடந்த 11ஆம் தேதி வேலூரில் நடைபெற இருந்த இரங்கல் கூட்டமும் நேற்று சென்னையில் நடைபெற இருந்த பேரணியும், இன்று மதுரையில் நடைபெற இருந்த இரங்கல் கூட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனித நேய உணர்வுகளை நசுக்குவதாக அமைந்துள்ளது.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதைப்போல தமிழக முதல்வருக்கு இயல்பாகவே அமைந்துள்ள தமிழ் இனமான உணர்வும், மனித நேய உணர்வும் இரங்கல் கவிதையாக வெளிப்பட்டதை உலகறியும். மனித நேய உணர்வுள்ள முதல்வர், இரங்கல் ஊர்வலம் நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பழ.நெடுமாறன், வைகோ, பஷீர் அகமது உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனை ஏதுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமைதியான முறையில் நடைபெறும் இரங்கல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கவும் வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.