கோவையில் பா.ம.க. சார்பில் இன்று நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் தமிழகத்துடன் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில்லை என்ற முடிவில் ஓரணியில் நிற்கின்றன. எனவே புதிதாகப் பதவியேற்றுள்ள பா.ஜ.க.வும் அதே முடிவைத்தான் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளை தனியாரிடம் தமிழக அரசு குத்தகைக்கு விடப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழக அரசின் இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஒரு தவறான கொள்கை முடிவு. இதனை பா.ம.க. எதிர்க்கிறது.
சமச்சீர் கல்வி குறித்து டாக்டர் முத்துக்குமரன் அறிக்கை கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு விரைந்து செயல்பட்டு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசின் குறைகளை நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். அதற்கான மாற்றுத் திட்டங்களையும் நாங்கள் முன் வைக்கிறோம்.
தற்போது தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு வைத்துக் கொண்டு கூட்டணி சேர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். எங்களுடைய செயல்பாடுகள் மீது மக்களை சிந்திக்க வைக்கிறோம். இதன் மூலம் 2011ல் தமிழகத்தில் பா.ம.க.வின் ஆட்சி அமையும். இது வெறும் முழக்கமல்ல.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனையில் முதலமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மத்திய அரசை உடனடியாக ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடச் செய்து இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் அரசியல் தீர்வை காண வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். அதுபற்றி நான் கருத்து எதையும் சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்தும் நான் எதுவும் விமர்ச்சிக்க தயாராக இல்லை'' என்று ராமதாஸ் கூறினார்.