''ரேஷன் அரிசி கடத்தலில் உள்ள பின்னணி குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வுக் கழக (சி.பி.ஐ. ) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்'' என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைகளுக்கு கிலோ ரூ.2 விலையில் அரிசி வழங்கப்படும் என்று அறிவித்து தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ரேஷன் அரிசி உண்மையில் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சி அளிக்கிறது.
ரேஷன் கடைக்கான அரிசி கடத்தப்படுகிறது என்றால், தமிழக அரசின் உணவுத் துறைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ரயிலில் கொண்டு செல்ல பல விதிமுறைகள் இருக்கும் போது டன் கணக்கில் அரிசி கடத்துவது என்றால் ரயில்வே துறைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. மாணவன் படிப்பதற்கு பண உதவி கேட்டாலே மறுக்கும் வங்கிகள், எந்த முகாந்திரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்கள் கடத்தல்காரர்களுக்கு வழங்கி உள்ளது என்றால் அவர்களும் இதற்கு உடந்தை என்பது புலனாகிறது. இந்தப் பணமும் இனி திரும்ப வரப்போவதில்லை.
இந்த அரிசி கடத்தலில் தி.மு.க. அரசு, மத்திய அரசின் ரெயில்வேத்துறை, வங்கிகள், இவற்றின் பின்னணியில் உள்ள அதிகாரிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் ஆகியவை பற்றி தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க உடனடியாக மத்திய புலனாய்வு கழக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
ரேஷன் அரிசியையே நம்பி பிழைக்கும் எத்தனையோ ஏழைகளுக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் திட்டத்தைக் கூட ஊழல் பெருச்சாளிகள் விட்டு வைக்கவில்லை. ஓய்வுக்கு ஓய்வு தந்துவிட்டு ஓயாமல் உழைப்பதாக சொல்லிக் கொள்பவர்கள் ஊழலுக்கு ஓய்வு தந்து ஏழை மக்களின் வாழ்வில் அக்கறை செலுத்துவார்களா? என்று விஜயகாந்த் கேட்டுள்ளார்.