காஞ்சிபுரம் நகராட்சியில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நாளை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் நகர மன்றத்திற்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய அ.தி.மு.க. நகர மன்றத்தலைவர் பதவியையும் கைப்பற்றியது. காஞ்சிபுரம் நகர மக்களின் மிக அத்தியாவசியத் திட்டமான பாதாள சாக்கடைத் திட்டம் எனது ஆட்சிக்காலத்தில் 10.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. தற்போது அத்திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சியில், தி.மு.க.வினர் அரசு அதிகாரிகளை மிரட்டி எந்தவித மக்கள் நலப் பணிகளையும் நிறைவேற்றவிடாமல் முட்டுக் கட்டை போடுவதோடு, அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் பல்வேறு பொய் வழக்குகளை புனைந்து அவர்களை அச்சுறுத்தி வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
அ.தி.மு.க.வினர் மீது தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டு வருவதைக் கண்டித்தும், காஞ்சிபுரம் நகராட்சியில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், காஞ்சிபுரம் நகரக்கழகத்தின் சார்பில் நாளை (14ஆம் தேதி) காஞ்சீபுரம் நகரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.