தடையை மீறி பேரணி: வைகோ, பழ.நெடுமாறன் சிறையில் அடை‌ப்பு!

Webdunia

செவ்வாய், 13 நவம்பர் 2007 (10:38 IST)
விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஊர்வலம் செல்ல முயன்ற வைகோ, பழ.நெடுமாறன் உ‌ள்பட பல‌ர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன், 5 தளபதிகளை இலங்கை அரசு விமானம் மூலம் குண்டுவீசி படுகொலை செய்தது. இதனை கண்டிக்கும் வகையிலும், மறைந்த சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதத்திலும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் இரங்கல் ஊர்வலம் மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

ஆனால் இந்த ஊர்வலத்திற்கு காவ‌ல்துறை‌யின‌ர் அனுமதி மறுத்துவிட்டனர். ஆனா‌லு‌ம் தடையை மீறி ஊர்வலம் ந‌ட‌த்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஒரு ஜீப்பில் நின்று கொண்டு தொண்டர்கள் புடைசூழ திடீரென்று கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்தனர். அவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் தடுத்து நிறுத்தினர்.

அதனை தொடர்ந்து வைகோ ஜீப்பில் நின்று கொண்டு மைக்கில் பேசத் தொடங்கினார். அவர் சிறிது பேசியதும் மைக்கின் வயரை காவ‌ல்க‌ள் பிடுங்கினார்கள். இதனால் கோபம் அடைந்த வைகோ, இதற்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து வைகோ பேசிக்கொண்டு இருக்கும்போதே பலமுறை மைக்கை காவ‌ல‌ர்க‌ள் இழுத்தனர். மேலும் ஆவேசம் அடைந்த வைகோ, மைக் இல்லாமல் கோஷங்களை எழுப்பினார்.

இதனை தொடர்ந்து வைகோ, பழ.நெடுமாற‌ன், மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த திருமாறன் உ‌ள்பட 334 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். அவ‌ர்க‌ள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதான‌த்த‌ி‌‌ல் காவலில் வைக்கப்பட்டனர்.

பி‌ன்ன‌ர் வைகோ, பழ.நெடுமாறன் உள்பட கைது செய்யப்பட்ட அனைவரும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அவர்கள் அனைவரையும் 10 வேன்களில் ஏற்றிச்சென்று இரவோடு, இரவாக புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்