மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்: அமைச்சர் பொன்முடி தகவல்!

Webdunia

செவ்வாய், 13 நவம்பர் 2007 (10:01 IST)
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூ‌றினா‌ர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது பட்டமளிப்பு விழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்ட பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பேசுகை‌யி‌ல், சென்னை பல்கலைக்கழகம், கல்வி பயிற்றுவிப்பதுடன் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரை போற்றும் கல்விக்கூடமாகவும் திகழ்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு டாக்டர் ப‌ட்டம் வழங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களுக்கு பட்டம் வழங்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்போது 10 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறோம்.

ஒருவர் இளமையில் எப்படி இருக்கிறாரோ அதேபோல்தான் முதுமையிலும் இருப்பார். இளமையில் சுறுசுறுப்பாக இருந்தால் முதுமையிலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். எத்தனை வயதானாலும் வேகம் குறையாது. இளமையில் சோம்பேறியாக இருப்பவர்கள் வயதான காலத்திலும் சோம்பேறிகளாகத்தான் இருப்பார்கள். இளமையில் சுறுசுறுப்பாக இருந்ததால்தான் 84 வயதிலும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார் முதலமைச்சர் கருணாநிதி. கட்சி கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவரை இ‌ன்றைய இளைஞர்கள் தங்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில், காமராஜர் பல்கலைக்கழகத்தில், பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கலாம். அதோடு நின்றுவிடாமல் அவர்கள் அண்ணாவையும், காமராஜரையும், பெரியாரையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சமூக உணர்வு வரும். இதை அறிவுரை என்று நினைக்காமல் இல்லாமல் ஒரு வேண்டுகோளாக விடுக்கிறேன் எ‌ன்று அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றினா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்