சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், '' தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதை, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு என்று கருதுவது கற்பனையானது. அது முற்றிலும் அரசியல் ஆதாயத்தின் அடிப்படையிலானது. காங்கிரஸ் கட்சியினர் இந்தப் போக்கைக் கைவிட வேண்டும். தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்று சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களானவர்கள் இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
''அமெரிக்க வல்லரசு ஈராக் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட வைத்தது. அதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இத்தனைக்கும் மத்திய அரசு, அமெரிக்காவுடன் நல்லுறவு கொண்டிருக்கிறது. அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க விரும்புகிறது. அப்படி இருந்தபோதும் சதாம் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து அறிக்கை விட்டது.
ஆனால் தமிழக முதல்வர் கலைஞர், தமிழ்செல்வன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை எதுவும் விடவில்லை. அவர் மறைவுக்காக இரங்கல் கவிதையைத்தான் எழுதினார். இதை ஏன் சிலர் அரசியலாக்குகின்றனர்?'' என்றும் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.