15 முதல் 21 வயது வரையில் உள்ளவர்கள் இளைஞர்களை அரசியலில் சேர்த்தால் எதிர்கால சந்ததியையே கேள்விக்குறியாக்கி விடும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 15 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை இளைஞர் அணியில் சேர்த்திட காஞ்சி மாவட்ட தி.மு.க. இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக பத்திரிகை செய்தி கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 15 வயது என்பது ஒரு இளைஞனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பள்ளி மாணவப் பருவத்தை உள்ளடக்கியது. அத்தகைய பள்ளி மாணவப் பருவத்தில் பெரும்பாலும் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை கையாலுவதில் மிகவும் போராட வேண்டியிருக்கும்.
இந்த கால கட்டத்தில்தான், நல்லது எது கெட்டது எது என்று புரியாமல் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களது படிப்பில் பின்தங்கும் நிலை ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது. அத்தகைய மாணவப் பருவத்தில் அரசியல் அறிவு என்பது அத்தியாவசியமாக இருந்தாலும், அவர்களுக்கு கல்வி புகட்டப்படும் அப்பருவமே அவர்களின் எதிர்காலத்தையும், அந்த இளைஞர்களின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து, நிகழ் காலத்தில் போராடிக் கொண்டிருக்கும் லட்சோப லட்சம் பெற்றோர்களுக்கு முக்கியமான காலமாகும்.
சமூக சேவை சிந்தனை உடைய இளைஞர்கள் தங்கள் கல்வியை முடித்துவிட்டு தாங்களாகவே தன்னார்வத்தோடு அரசியலில் ஈடுபடுவது தவறில்லை. ஆனால் அவர்களை ஆளும் கட்சி என்னும் பெயரால் ஆசைகாட்டி அதிகார பலத்தைப் பயன்படுத்தி கட்சியில் சேர்ப்பது எதிர்கால சந்ததியையே கேள்விக்குறியாக்கி விடும்.
எனவே கொடிப்பிடிப்பதற்கும், கோஷமிடுவதற்கும் ஏதுமறியா இளம் சிறார்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று யோசனைகளை தொழிலாளர் அமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.