விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடைபெறும் ஊர்வலத்தில் தடையை மீறி மதிமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழழீத்தின் தீச்சுடராக ஒளி வீசிய தமிழ்செல்வன், சிங்கள இனவாத அரசின் குண்டுவீச்சால் கொலையுண்ட செய்தி தமிழர்களின் நெஞ்சில் பேரிடியாய் விழுந்தது.
இலங்கைத் தீவில் தமிழ் குலத்தையே கருவறுக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு நடத்தும் இனப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் கடமையை ஆற்றாததோடு, அப்படுகொலைக்கு உடந்தையாக மத்திய அரசு இலங்கைக்கு ராடார்களையும், ஆயுதங்களையும் வழங்கி வரும் துரோகத்தைச் செய்து வருகிறது.
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி தீபக்கவூர், இலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியில் ஆயுதங்கள் வழங்குகிறது என்று கடந்த அக்டோபர் 27ம் நாள் பகிரங்கமாகவே அறிவித்தார்.
இலங்கைக் கடற்படையோடு இந்தியக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்ததும், தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு திட்டமிட்டுச் செய்துள்ள துரோகம் ஆகும். சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போரில் கடற்புலிகளின் நடவடிக்கைகளை உளவு சொல்லி, சிங்களக் கடற்படைத் தாக்குதலுக்கு உதவுகிற ஐந்தாம் படை வேலையை இந்தியக் கடற்படை செய்து வருகிறது.
போர் முனைகளில் மட்டுமல்லாது, தமிழர் வாழும் பகுதிகளிலும் குண்டு வீசி கொலை செய்யும் இலங்கை விமானப் படைக்கு ராடார்களைக் கொடுத்ததோடு பல்வேறு வகையிலும் இந்தியா உதவுகிறது.
இந்தப் பின்னணியில் தான், விடுதலைப் புலிகளின் தரப்பில் சமாதானப் பேச்சுகள் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த தமிழ்செல்வன் கொல்லப்பட்டுள்ளார்.
சிங்கள அரசின் கொலை பாதகச் செயல்களுக்கு இந்தியாவின் மன்மோகன்சிங் அரசு துணை போகிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில், இந்தத் துரோகத்துக்கு, அரசில் பங்கேற்றுள்ள கட்சிகள், குறிப்பாக, தமிழகத்தை ஆளும் திமுக பொறுப்பாகும்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கைதான் எங்கள் கொள்கை என்று அறிவித்த கருணாநிதி, நாளைய தினம் (நவம்பர் 12ம் நாள்) தலைநகர் சென்னையில், தமிழ்செல்வன் இரங்கல் பேரணிக்குக் காவல்துறை அனுமதியை மறுக்கச் செய்துள்ளார்.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்தவாறு தமிழ்செல்வன் இரங்கல் ஊர்வலத்தில் தடையை மீறி மதிமுக பங்கேற்கும் '' என்று வைகோ கூறியுள்ளார்.