பறக்கும் ரயில் நிலையங்களுக்கு பேருந்து வசதி : ஆர். வேலு!
Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2007 (13:15 IST)
சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 8 ரயில் நிலையங்களுக்கு பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு தெரிவித்துள்ளார்!
வளர்ந்து வருகின்ற சென்னை நகரின் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு பறக்கும் ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் இதுவரை சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
புறநகர் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லத் தேவையான பேருந்து வசதி இல்லை என்பதே இதற்குக் காரணமாகும்.
இந்நிலையில், சென்னை கடற்கரை, சிந்தாதிரிப் பேட்டை, சேப்பாக்கம், கலங்கரைவிளக்கம், கோட்டூர்புறம், திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி ஆகிய ரயில் நிலையங்களை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.
பின்னர், 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள இந்த 8 ரயில் நிலையங்களுக்கும் விரைவில் பேருந்து வசதி செய்து தரப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இதற்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.