நெய்வேலி என்.எல்.சி நிறுவனம், மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் முதன்மையானதாகும். இந்த நிறுவனத்தில் 3 பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களும், 3 அனல் மின் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி 2-வது அனல் மின் நிலையம் 1470 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாகும். இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 2-வது அனல் மின் நிலையம் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த மின் நிலையம் 88.15 சதவித உற்பத்தித் திறனுடன் இயங்கி 569.11 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. எதிர்பாராத மின் உற்பத்தி தடங்கல் வெறும் 1.83 சதவீதம் மட்டுமே.
மேலும் இந்த மின் நிலையம் 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க 0.40 மில்லி லிட்டர் எரிஎண்ணெயும், 0.05 லிட்டர் தாதுக்கள் நீக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.
உற்பத்தி சார்ந்த விற்பனை விலை என்ற புதிய கொள்கையின்படி இந்த மின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலை மின் உற்பத்தி பிரிவுகள் முறையே 93.93 விழுக்காடு, 90.50 விழுக்காடு உற்பத்தித் திறனுடன் இயங்கியுள்ளன.
இது நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக மின் உற்பத்தியில் எட்டப்பட்ட புதிய சாதனையாகும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.