கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்க இருப்பதைக் கொண்டாடும் வகையில் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் இல.கணேசன் தலைமையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
பின்னர் இல.கணேசன் கூறுகையில், ''கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வரும்படி பா.ஜ.கவை ஆளுநர் அழைத்துள்ளார். பா.ஜ.க. வட இந்தியாவில் செல்வாக்கு பெற்ற கட்சியாகவும், பல மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் இருந்தாலும், தென் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது இதுதான் முதல் முறை.
எனவே, தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற வகையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கர்நாடகாவில் நாங்கள் பெற்றுள்ள செல்வாக்கு ஓசூர் வழியாக தமிழ்நாட்டிற்கும் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
எங்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசாக இதனை கருதுகிறோம். தேவகவுடா பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும், குமாரசாமி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறியிருக்கிறார். முதலமைச்சர் பொறுப்பு ஏற்க இருக்கும் எடியூரப்பாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.