சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு போராளிகளுக்கு இரங்கல் தெரிவித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சார்பில் சென்னையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கி. வீரமணி பேசியதாவது:
“சுமார் 30 கல் தொலைவில் உள்ள நாட்டால் வேறுபட்டிருந்தாலும், நாம் வீட்டால் ஒன்றுபட்டவர்கள், இனத்தால் ஒன்றுபட்டவர்கள். அப்படிப்பட்ட நம் இனத் தமிழர்கள் வாழ்வுரிமைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற பொழுது சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஆறுபேரை இழந்திருக்கிறோம்.
ஈழத் தமிழர்கள் மறைந்ததற்காக தமிழக முதல்வர் கலைஞர் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வைப் பிரதிபலிக்கிற வகையில் இரங்கல் கவிதை வெளியிட்டார்.
முதல்வர் கலைஞர் ஆட்சிக்காக வாழக் கூடியவர் அல்ல. தமிழின மீட்சிக்காக வாழக்கூடியவர். தமிழர்களுடைய ஒட்டு மொத்தக் குரலை அவர் பிரதிபலித்திருக்கிறார். அவர் ஆட்சியிலே இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சியையே நடத்த முடிகிறது.
சிங்கள அரசு, தனது போர் முறையில் குறைந்த பட்ச தர்ம நியாயங்களையாவது இதுவரை பின்பற்றியிருக்கிறதா? கிடையாது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இலங்கையின் தமிழர் பகுதியான வாகரையில், இடம் பெயர்ந்தோருக்கான முகாமின் மீது சிங்கள இராணுவம் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் பலரைக் கொன்றது.
அமெரிக்காவும் பிற நாடுகளும் அதைக் கண்டித்தன. நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார்கள். சிங்கள அரசு மறுநாள் வருத்தம் தெரிவித்தது.
வாகரை படுகொலைகளை அடுத்து இரண்டு நாள் கழித்து 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கொழும்புவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ ரவிராஜ் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையின் உதவியுடன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என அதிபர் மகிந்த ராஜபக்ச கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஈழத்திலே உள்ள விடுதலைப் புலிகளின் உயிர்த் தியாகம் சாதாரணமானதா? இனி வரக்கூடிய மக்களாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக களச்சாவை யாசித்துப் போட்டிப் போட்டுக் கொண்டு பெறுகிறார்கள்.
உலக வரலாற்றில் இப்படி ஒரு விடுதலை போராட்டம் நடந்ததில்லை. ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அளவிற்கு இப்படி ஒரு போராட்டத்தை தம்பி பிரபாகரன் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கின்றார்.
போர்க்களத்தில் இழப்புக்கள் வரும் துன்பங்கள், துயரங்கள் வரத்தான் செய்யும். நாம் நிறைய இழந்திருக்கின்றோம் என்ற வேதனை நமக்கு இருந்தாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.
இது அழிந்து கொண்டிருக்கின்ற ஒரு இனம் அல்ல. வீரத்தின் ஊற்றுக்கண்.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் தீவிரவாதிகளும் அல்ல. நம்முடைய இனத்தவர்களுக்கு கேடயமாக, வாளாக இருக்கக் கூடியவர்கள். எனவே நம் இனத்தவரை எதிர்ப்பவர்கள் யார் என்பதை அடையாளம் காணுங்கள்.
ஈழத் தமிழர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக மக்களின் உணர்வு என்பது கனன்று கொண்டிருக்கின்ற நெருப்பு. அதை எதிர்க்கின்ற குப்பைகள் அந்தத் தீயில் கருகிப் போகும்” என்றார் கி. வீரமணி.