இடநெருக்கடியை சமாளிக்கவே சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கம், துணை விமான நிலையம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை எதிர்த்து வீட்டு வசதி நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தற்போதுள்ள விமான நிலையத்தில் 2 ஓடுதளங்கள் மட்டுமே உள்ளன. பயணிகள் விமான போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் அதிகரித்துள்ளன. தனியார் விமானங்கள் அதிகம் பெருகியுள்ளன. தற்போதுள்ள விமான நிலையத்தில் அதிக விமானங்களை நிறுத்துவது சிரமமாக உள்ளது.
இதனால் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் உடனடியாக இறங்க முடியாததால் எரிபொருள் வீணாகிறது. விமான நிலையத்தை விரிவுபடுத்தாவிட்டால் வெளிநாட்டு விமானங்கள், வெளிமாநிலங்களிலுள்ள விமான நிலையங்களை நாடி செல்லும். இதனால் தமிழகத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.
இடநெருக்கடியை சமாளிக்கவே சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் வரும் 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.